திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையத்தில், பொதுமக்கள் மற்றும் ஆட்டோ தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையைத் தொடர்ந்து ஆட்டோக்கள் சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1,112 கோடியில் புதிய முனையம் அமைக்கப்பட்டு கடந்தாண்டு ஜூன் 11-ந் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. இங்கிருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய், சார்ஜா, தோஹா, குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. திருச்சி – புதுக்கோட்டை பிரதான சாலையிலிருந்து சுமார் 1.9 கி.மீ தொலைவில் புதிய முனையத்தின் நுழைவாயில் பகுதி அமைக்கப் பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களை கருத்தில் கொண்டு ஆட்டோக்கள் செல்வதற்கு அனுமதி வழங்குவதில்லை. முனையத்தின் வெளிப்பகுதியில்தான் பயணிகளை ஏற்றி மற்றும் இறக்கிச் செல்ல முடியும். புதிய முனையத்துக்கு சுமார் 1.9 கி.மீ. தொலைவு செல்ல வேண்டியிருந்ததாலும், புறப்பாடு பகுதிக்கு முதல் மாடிக்கு செல்ல வேண்டியுள்ளதாலும் உடைமைகளுடன் பயணிகள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது. அனைவரும் கார்களில் சென்று வர சாத்தியமில்லை என்பதால், ஆட்டோக்கள் சென்று வர அனுமதிக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. பயணிகள் நலன் மற்றும் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஆட்டோக்களை அனுமதிக்க வேண்டும் என திருச்சி எம்பி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் விமான நிலைய இயக்குநருக்கு பரிந்துரைத்தனர். கோரிக்கைகளை பரிசீலித்த விமான நிலைய இயக்குநர் ஞானேஸ்வரன், புதிய முனையத்துக்கு ஆட்டோக்கள் சென்று வர கடந்த இரு நாட்களாக அனுமதி அளித்துள்ளார்.
Comments are closed.