திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கே.வி.பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டித்துரை(23). இவர் தனது நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகியோருடன் மது போதையில் அன்பில் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழாவிற்கு சென்றுள்ளார். அங்கு மற்ற மூன்று நண்பர்களான சந்தோஷ்குமார், ஜெகன், ஆனந்த் ஆகியோருடன் இணைந்து 6 பேரும் ஒன்றாக திருவிழாவில் சுற்றியிருக்கின்றனர்.
அப்போது, போதை தலைக்கேறிய நிலையில் பாண்டித்துரை தனது இருசக்கர வாகனத்தை கோவில் அருகிலேயே விட்டுவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வீரமணி வீட்டிற்குச் சென்ற அவர், தனது இருசக்கர வாகனம் எங்கே என்று அவரிடம் கேட்டுள்ளார். அவர் நண்பர்களை தொடர்பு கொண்டு இரு சக்கர வாகனத்தை கண்டுபிடித்து தருமாறு கேட்டுள்ளார். அதன்பேரில், சந்தோஷ்குமார், ஆனந்த் மற்றும் ஜெகன் மூவரும் கோவில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்து பாண்டித்துரையிடம் கொடுக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது மது போதையில் இருந்த பாண்டித்துரை, சந்தோஷ்குமாரை திட்டினார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பாண்டித்துரை வீட்டுக்குள் சென்று தான் வைத்திருந்த கொக்கு சுடும் நாட்டு துப்பாக்கியால் சந்தோஷ்குமாரை சுட்டார். இதில், உடலில் பால்ரஸ் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்த சந்தோஷ் குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக லால்குடி போலீசார் வழக்கு பதிந்து பாண்டித்துரையை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த பாண்டித்துரை
இன்று (ஏப்ரல் 10) கைது செய்யப்பட்டார். பின்னர், அவர்மீது கொலை முயற்சி வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

Comments are closed.