Rock Fort Times
Online News

திருச்சியில் மூதாட்டியின் ரூ.15 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயற்சி…- திமுக பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்…!

திருச்சி, தென்னூர் அண்ணா நகர் புது மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தனம். இவரது மனைவி நல்ல பொண்ணு (78). இவர், திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அப்பகுதி மக்களுடன் இன்று(07-04-2025) திங்கட்கிழமை திரண்டு வந்தார். அப்போது போலீசார் அனைவரையும் உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மூதாட்டியுடன் ஐந்து பேர் மட்டும் மனு கொடுக்க செல்லலாம் என்று தெரிவித்தனர். இதையடுத்து மூதாட்டி நல்ல பொண்ணு மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தார். அந்த மனுவில், திருச்சி பஞ்சப்பூர் கிராமம், சாத்தனூர் பகுதியில் எனக்கு விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் 45 வருடமாக நான் விவசாயம் செய்து வருகிறேன். அந்த இடத்தில் வேலி அமைக்க செல்லும்போது, திமுக சுற்றுச்சூழல் அணி மாநகர அமைப்பாளர் பஞ்சப்பூரைச் சேர்ந்த பெரியசாமி என்கிற கருவண்டு என்பவர் அடியாட்களுடன் வந்து என்னை மிரட்டி தாக்கி நிலத்தை அபகரிக்க முயன்றார். இதுதொடர்பாக எனது பேரன் எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது வயது முதிர்வு காரணமாக என்னை ஏமாற்றி ,எனக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து விடலாம் என்ற எண்ணத்துடன் அந்த திமுக பிரமுகர் பெரியசாமி செயல்படுகிறார். எனவே, அந்த நபர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்