Rock Fort Times
Online News

கடலுக்கு நடுவே ரூ.550 கோடியில் புதிதாக கட்டப்பட்ட பாம்பன் புதிய ரயில்வே பாலம்:- நாளை( ஏப்.6) திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி … 5 அடுக்கு பாதுகாப்பு..!

கடலுக்கு நடுவே கட்டப்பட்ட பாம்பன் பழைய ரயில் பாலம் பழுதடைந்ததைத் தொடர்ந்து ரூ.550 கோடியில் புதிய ரயில் தூக்குப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பாலத்தின் திறப்பு விழா நாளை( 06-04-2025) நடக்கிறது. இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி அனுராதபுரத்திலிருந்து நாளை காலை 10.40 மணிக்கு இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, பகல் 11.45 மணியளவில் மண்டபம் ஹெலிபேட் தளத்துக்கு வருகிறார். பின்னர், கார் மூலம் பாம்பன் சாலைப் பாலத்துக்கு வந்து பகல் 12 மணியளவில் பாம்பன் புதிய ரயில் தூக்குப் பாலத்தை திறந்து வைப்பதுடன், புதிய `பாம்பன் எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அங்கிருந்து பிற்பகல் 12.30 மணியளவில் புறப்பட்டு ராமேசுவரம் கோயிலுக்குச் செல்லும் பிரதமர் அங்கு சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர், ரயில்வே சார்பில் நடைபெறும் பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்றுப் பேசுகிறார். அப்போது, வாலாஜாபேட்டை- ராணிப்பேட்டை, விழுப்புரம்-புதுச்சேரி, பூண்டியன்குப்பம் – சட்டநாதபுரம், சோழபுரம்-தஞ்சாவூர் பகுதிகளுக்கான நான்கு வழிச் சாலை திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநில அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், எம்.பி.க்கள் நவாஸ்கனி, தர்மர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிற்பகல் 2.35 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுரை விமான நிலையம் செல்லும் பிரதமர், அங்கிருந்து விமானத்தில் டெல்லி செல்கிறார். பிரதமரின் வருகையையொட்டி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏறத்தாழ 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், பிரதமர் வருகையையொட்டி ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் ஆகிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க போலீஸார் தடை விதித்துள்ளனர்.
*

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்