தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தர்பூசணி பழங்களின் விற்பனை களை கட்டி உள்ளது. வெயில் கடுமை காரணமாக, பலரும் தர்பூசணியை வாங்கி சென்று சாப்பிட ஆரம்பித்தனர். இந்நிலையில், சென்னையில் தர்பூசணி விற்கப்படும் கடைகளில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவற்றில் ரசாயனம் கலக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்ததால் அவற்றை அகற்றினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனால், தர்பூசணி வாங்கி சாப்பிட மக்கள் தயக்கம் காட்டினர். இதற்கு வியாபாரிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பின்னர் இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் விளக்கம் அளித்திருந்தார். அதேசமயம் சென்னையில் பிரபலமான ஹோட்டலில் ஆய்வு செய்ய அரசு வாகனத்தில் சென்றிருக்கிறார். ஹோட்டல் வாசலுக்குச் சென்ற அவர், பின்னர் சோதனை நடத்தாமல் சென்றுவிட்டார். இந்நிலையில், அதிகாரி சதீஷ்குமார் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாடு மருந்து நிர்வாகத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ், கூடுதலாக சென்னை மாவட்ட பொறுப்புகளை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் கூறுகையில், தனக்கு திடீரென உடல் குறைவு ஏற்பட்டதால் அந்த ஓட்டலில் சோதனை நடத்த இயலவில்லை. மற்றபடி எதுவும் காரணம் இல்லை என்று தெரிவித்தார்.

Comments are closed.