Rock Fort Times
Online News

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறவில்லை என்றால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு- முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீது 12 மணிநேரம் விவாதம் நடத்தப்பட்டு நேற்று( மார்ச் 2) நள்ளிரவு 2 மணியளவில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின்,  அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் இன்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர். கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், கடந்த மார்ச் 23 ஆம் தேதி வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவின் முன்வரைவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தியாவின் பல்வேறு கட்சிகளின் எதிர்ப்புகளை மீறி வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. இந்த மசோதாவுக்கு எதிராக 232 உறுப்பினர்களும், ஆதரவாக 288 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். இந்த சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டியது என்பதுதான் நமது நிலைபாடு. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு நள்ளிரவு 2 மணிக்கு மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கட்டமைப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல், மத நல்லிணக்கத்தை குலைக்கும் செயல். இதற்கு எதிராக கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டத்தில் பங்கேற்றுள்ளோம். இந்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்