இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு உணவு உண்ணாமலும், தண்ணீர் அருந்தாமலும் 30 நாட்கள் நோன்பு கடைபிடித்து வந்தனர். சமூக நல்லிணக்கத்தை போற்றும் வகையில் சாதி, மத, பேதமின்றி மானுட மாண்பை வெளிப்படுத்தும் விதமாக நோன்பு திறக்கும் நிகழ்வு அனைத்து இஸ்லாமியர் அமைப்பினராலும் நடத்தப்பட்டு வந்தது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று பிறை தென்பட்டதால் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி அறிவித்திருந்தார். அதன்படி இன்று நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக சிறப்புத் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ரமலானை கொண்டாடி வருகிறார்கள். திருச்சியில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி சையது மூதுர்ஷா பள்ளி மைதானத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் முகமதுராஜா தலைமையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதேபோல் திருச்சி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. அதேபோல் ஒத்தக்கடை, கோட்டை ஸ்டேஷன் ரோடு, கஃபூர் பள்ளிவாசல் ஈத்காஹ் மைதானம் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்புடன் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. அதன் பின்னர் அனைவரும் கட்டித் தழுவி தங்களது ரம்ஜான் வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.


Comments are closed.