Rock Fort Times
Online News

வக்பு வாரிய மசோதாவை 115 முறை திருத்த வேண்டிய அவசியம் என்ன?- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேள்வி!

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக “இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையிலும், ரூஹூல் ஹக், முப்தி முஹம்மது முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் உலமா பெருமக்கள், ஜமாத்தார்கள், இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்டு நோன்பு திறந்தனர். அதனைத் தொடர்ந்து அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் தொழுகை நடந்தது. பின்னர், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இஸ்லாமியர்கள் மத்தியில் பேசுகையில், இறைவனிடம் கையேந்துங்கள் அவர் இல்லை என்று சொல்லுவதில்லை என்ற பாடலை நாகூர் ஹனிபா பாடினார். அதே குரல்தான் ஓடி வருகிறார் உதயசூரியன் பாடலையும் பாடினார். மந்திரம், தந்திரத்திற்கு ஆளாகாத மார்க்கத்தை கொண்டவர்கள்தான் இஸ்லாமியர்கள் என சொன்னவர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி. பாரம்பரியத்தை விடாமல் பின்தொடர்பவர்கள் இஸ்லாமியர்கள் என சொன்னவர் பேரறிஞர் அண்ணா. வக்பு வாரிய மசோதாவை 115 முறை திருத்தியுள்ளது மத்திய அரசு. இதில் ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. இதுதொடர்பாக சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டு வந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இறைவனிடம் துவா கேட்கும் உங்களிடம் நாங்கள் துவா கேட்கிறோம். உங்களின் தூய்மையான வாக்குகளை கேட்கிறோம், முதலமைச்சரின் நலமுடன் வாழ வேண்டும் என உங்களிடம் துவா கேட்கிறோம் என்று பேசினார். இந்நிகழ்வில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமத், மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன் மற்றும் கழக நிர்வாகிகள் இஸ்லாமிய பெருமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்