Rock Fort Times
Online News

திருச்சி, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் தேரோட்டம் கோலாகலம்…!

பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் -அகிலாண்டேஸ்வரி கோவில். இந்த கோவிலில் பங்குனி மண்டல பிரமோற்ஸவ விழா 48 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா மார்ச் 8ம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனைத்தொடர்ந்து பங்குனி தேரோட்டத்திற்கான எட்டுத்திக்கு கொடியேற்றம் மார்ச் 18- ம் தேதி நடைபெற்றது. அன்று முதல் தினமும் சுவாமி, அம்மன் காலையில் புறப்பாடு கண்டருளியும், மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்தநிலையில் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று (மார்ச் 30) நடைபெற்றது. முன்னதாக அதிகாலை சுவாமி, அம்மனுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மகர லக்னத்தில் உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர்.
காலை 7.10 மணிக்கு ஜம்புகேஸ்வரர் சுவாமி தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.

மேல உள்வீதி, வடக்கு உள்வீதி, கீழ உள்வீதி, தெற்கு உள்வீதி ஆகிய பகுதிகளில் தேர் சுற்றி வந்து நிலை நிறுத்தப்பட்டது. அதனைதொடர்ந்து காலை 10.30 மணிக்கு மேல் அகிலாண்டேஸ்வரி அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பயபக்தியுடன் தேர்களை வடம்பிடித்து இழுத்தனர்.  தேரோட்டத்தை ஒட்டி திருவானைக்காவல் விழாக்கோலம் பூண்டுள்ளது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர், குளிர்பானங்கள், பழங்கள், அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்