“கலைஞர் டோல்கேட்” பெயர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு எதிரொலி: பழையபடி, “டிவிஎஸ் டோல்கேட்” என்றே அழைக்கப்படும்… * மாநகராட்சி ஆணையர் வே.சரவணன்!
திருச்சியில் டிவிஎஸ் டோல்கேட், நம்பர்- 1 டோல்கேட் என இரண்டு டோல்கேட் பகுதிகள் உள்ளன. இந்தப் பெயர்கள் பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகின்றன. இந்தநிலையில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் “கலைஞர் டோல்கேட்” என பெயர் மாற்றம் செய்யப்படும் என மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் தங்களது கண்டனங்களையும், எதிர்ப்பையும் தெரிவித்தனர். “கலைஞர் டோல்கேட்” என்பதற்கு பதிலாக திருச்சிக்கு பெருமை சேர்த்த ” நடிகர் திலகம்” சிவாஜி கணேசன், திருச்சியில் கல்வி பயின்ற முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் போன்றோர்களின் பெயர்களை சூட்டலாம் என்று தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அண்மையில் நடைபெற்ற திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் டிவிஎஸ் டோல்கேட் என்பதை “கலைஞர் டோல்கேட்” என மாற்றுவதற்கு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் திருச்சி மாநகராட்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டிவிஎஸ் டோல்கேட்டை கலைஞர் டோல்கேட் என பெயர் மாற்ற உத்தேசிக்கப்பட்டதை தொடர்ந்து டிவிஎஸ் டோல்கேட் என்னும் பெயர் தொன்று தொட்டு அழைக்கப்பட்டு வருவதால் இதில் புதிதாக பெயர் மாற்றம் இல்லை என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.