ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 1000 பேருக்கு நலத்திட்ட உதவி: இஸ்லாமியர்களின் பாதுகாவலர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் * சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில துணை செயலாளர் பேச்சு
தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் இன்று (மார்ச் 29) நடைபெற்றது. விழாவுக்கு சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில துணைச்செயலாளர் துபாய் கே.அன்வர்அலி தலைமை தாங்கி 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், சிறுபான்மையினர் நல வாரியத்தை தொடங்கியவர் முத்தமிழஞர் கலைஞர் கருணாநிதி. அவர் முதல்-அமைச்சராக இருந்தபோது மிலாடி நபிக்கு விடுமுறை அறிவித்தார். சிறுபான்மையினர் நல ஆணையத்தை தொடங்கியதுடன், வக்பு வாரிய சொத்துகளை பராமரிக்க மானியம் வழங்கினார். இப்படி இஸ்லாமியர்களுக்கு பல முன்னெடுப்புகளை எடுத்தார். கலைஞர் கருணாநிதி வழியில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்றைக்கு சிறுபான்மையினரின் காக்கும் அரணாக ஆட்சி செய்துகொண்டிருக்கிறார். இஸ்லாமியர்களின் பாதுகாவலர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். இப்போது கூட வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார் என்று பேசினார். விழாவில் சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளர் சுபேர்கான் முன்னிலை வகித்தார். திருச்சி மாநகர கழக செயலாளரும், மாநகராட்சி மேயருமான மு.அன்பழகன், சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன், பகுதி செயலாளர் மோகன்தாஸ், கவுன்சிலர் புஷ்பராஜ், வட்ட செயலாளர் மூவேந்திரன், திருச்சி மத்திய மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு அமைப்பாளர் மார்ட்டின் குழந்தை ராஜ், ம.ஜ.க. மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சி முகமது செரீப் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். முடிவில் மாநகர அமைப்பாளர் அக்பர் அலி நன்றி கூறினார்.

Comments are closed.