பழம்பெருமை வாய்ந்த திருச்சி டிவிஎஸ் டோல்கேட் என்ற பெயரை “கலைஞர் டோல்கேட்” என பெயர் மாற்றம் செய்ய அவசியம் என்ன? * திருச்சி தெற்கு மாவட்ட அமமுக செயலாளர் ப.செந்தில்நாதன் கேள்வி!
திருச்சியில் டிவிஎஸ் டோல்கேட், நம்பர்- 1 டோல்கேட் என இரண்டு டோல்கேட் பகுதிகள் உள்ளன. இந்தப் பெயர்கள் பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகின்றன. இந்தநிலையில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் “கலைஞர் டோல்கேட்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப. செந்தில்நாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திருச்சியில் வசிக்கும் மக்களின் தனிமனித வருமானத்தை அதிகரிக்க எந்த முன்னெடுப்பும் இல்லாமல், அனுமதித்த நேரத்தை தாண்டி செயல்பட்டு வரும் மதுபான விடுதிகளை கட்டுப்படுத்தாமல், இதுபோல் இன்னும் எத்தனையோ அத்தியாவசிய பிரச்சனைகள் இருக்கின்ற பொழுது, பழம்பெருமை வாய்ந்த டிவிஎஸ் டோல்கேட் என்கின்ற பெயரை, கலைஞர் டோல்கேட்டாக மாற்ற, மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன?
ஒவ்வொரு ஊரிலும், அந்த ஊருக்கோ, நாட்டிற்கோ பெருமை சேர்த்த நபர்களால், அவர்கள் வாழ்ந்த தெருவையோ, இடத்தையோ, அவர்களின் பெயரை சூட்டுவது என்பது அந்த ஊருக்கும் பெருமை அந்த நபருக்கும் பெருமை. அப்படி இருக்கையில், திருச்சியில் டிவிஎஸ் டோல்கேட் என்ற பகுதி, பல தொழிலாளர்களுக்கு வாழ்வளித்த டிவிஎஸ் கம்பெனி செயல்பட்டதால், இயற்கையாகவே டிவிஎஸ் டோல்கேட் என்று, இத்தனை வருடங்களாக அழைக்கப்பெற்று வருகிறது. திருச்சியை சுற்றி உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து இந்நாள் வரை, எத்தனையோ ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி அளித்த, டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் தொண்டாற்றி வரும், ஜமால் முகமது கல்லூரியை நிறுவிய போற்றுதலுக்குரிய தெய்வத்திருவாளர்கள் ஜமால் முகமது சாஹிப் – காஜா மியான் ராவுத்தர் ஆகியோரின் பெயரையோ அப்பகுதிக்கு வைக்கலாமே.
திருச்சிக்கே பெருமை சேர்த்த, பொன்மலையில் வளர்ந்த நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் பெயரையோ அல்லது திருச்சியில் படித்த, பாரதத்தின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோரின் பெயரையோ பரிசீலிக்கும் எண்ணம் கூட வராமல் மனங்கள் குறுகியது ஏன்? அதனை விடுத்து திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தின், முன்னாள் தலைவரின் பெயரை திருச்சியில் உள்ள ஒரு முக்கிய இடத்திற்கு வைப்பது என்பது, திருச்சிக்கு பெருமை சேர்க்காது. அது மேலும் பொதுமக்களின் நகைப்புக்கு தான் உள்ளாகும். திருச்சியில் பிறந்த, திருச்சிக்கு பெருமை சேர்த்த எத்தனையோ மறைந்த தலைவர்கள் இருக்கும் பொழுது , அவர்களின் பெயரை வைக்காமல் ஒரு அரசியல் தலைவரின் பெயரை வைப்பது என்பது மக்களின் விருப்பத்திற்கு மாறாக அமையும் என்பதை கருத்தில் கொண்டு, திருச்சி மாவட்ட நிர்வாகம் இத் தீர்மானத்தை அங்கீகரிக்க கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். திருச்சி மாவட்ட நிர்வாகம், டிவிஎஸ் என்பதற்கு பதிலாக வேறு பெயரை வைத்துத்தான் தீர்வது என்று முடிவெடுத்தால், தமிழ் மொழிக்காக, திருச்சி ரயில் நிலையம் முன் தீக்குளித்து மாண்டு, திருச்சியிலே துயில் கொண்டிருக்கும், வீரத் தியாகி கீழப்பளுவூர் சின்னச்சாமி பெயரை வைத்தால், தமிழ் மொழிக்கே பெருமை சேர்ப்பதாகும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.