நாகை மாவட்டம் நம்பியா நகரை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது கடற்கரையில் உருளை வடிவிலான மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கி இருந்ததை கண்டனர்.
இந்த மர்ம பொருள் குறித்து நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு மீனவா்கள் தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து அந்த பொருளை சோதனை செய்த கஸ்டம்ஸ் அதிகாரிகள், க்யூ பிரிவு போலீசார் மற்றும் மெரைன் போலீசார் சீன எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்த அந்த சிலிண்டரில் கேஸ் நிரப்பப்பட்டிருந்ததை கண்டறிந்தனா். 3 அடி உயரமும் 30 கிலோ எடையுடன் கூடிய அந்த கேஸ் சிலிண்டரை கைப்பற்றிய மெரைன் போலீசார் அதனைப் பாதுகாப்பாக அங்கிருந்து எடுத்துச் சென்றனா். வங்க கடல் வழியாக தமிழக கடற்பகுதிக்கு மர்மமாக மிதந்து வந்துள்ள சீன நாட்டு கேஸ் சிலிண்டர், கப்பலில் இருந்து கடலில் தவறி விழுந்ததா? அல்லது கடலில் தூக்கி வீசப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையும் சோதனையும் மேற்கொண்டுள்ளனர். வங்க கடலில் மிதந்து வந்த சீன நாட்டு மர்ம பொருள் இன்று தமிழக கடற்கரையில் ஒதுங்கி இருப்பது நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.