தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி டெல்லி சென்று வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று( மார்ச் 18) மாலை சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி சென்ற அவர் சில மணி நேரம் டெல்லியில் இருந்து விட்டு மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். இந்த பயணம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை. அரசாங்க அலுவல் காரணமாக டெல்லி சென்றாரா?, அரசியல் பயணமாக சென்றாரா என்று தெரியவில்லை. அண்மையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த அமலாக்கத்துறை, 1000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த முறைகேட்டில் தனியார் மதுபான ஆலை நிறுவனங்களுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு காரணமாக யாரையாவது சந்திக்க டெல்லி சென்றாரா?என்றும் உறுதியான தகவல் இல்லை. இந்த சூழலில் , பாஜகவின் உயர்மட்ட தலைவர்களை சந்தித்து அமலாக்கத்துறை பிரச்னையை சுமூகமாக கையாளவே, கடந்த ஜனவரியில் துரைமுருகன் டெல்லி சென்றதாக கூறப்பட்டது.
அதேபாணியில் செந்தில் பாலாஜியும், பாஜக தலைவர்களை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது, அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் பெற்றதாக பதிவான வழக்கில் 2023ம் ஆண்டு ஜுன் மாதம் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அதைதொடர்ந்து, பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு 471 நாட்கள் கழித்து ஜாமினில் வெளியே வந்தார். உடனே அவருக்கு திமுக ஆட்சியில் மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் தான், அவரது நிர்வாகத்தின் கீழ் வரும் டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் முறைகேடு என்ற புகார் எழுந்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி எதற்காக டெல்லி சென்றார் என்பது தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான பேச்சாக இருக்கிறது.
Comments are closed.