Rock Fort Times
Online News

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 57 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு வலை…!

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (55). இவர் திருச்சி மாநகராட்சியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். ஸ்ரீதர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். வெளியூருக்கு சென்றிருந்த ஸ்ரீதரின் மனைவி முத்துச்செல்வி(50) வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 22 பவுன் நகைகள் மற்றும் ஐந்தாயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அதேபகுதியில் உள்ள ராயர் தோப்பு பகுதியில் குடியிருப்பவர் செல்வகுமார் (58). வேளாண்மைத்துறையில் ஓட்டுனராக வேலை பார்த்து வரும் இவர் குடும்பத்துடன் கும்பகோணம் கோவிலுக்கு சென்றிருந்தார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 35 பவுன் நகை மற்றும் பூஜை அறையில் இருந்த வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இதேபோல அமிர்தா நகரை சேர்ந்த கார்த்திகைவேல், ஆனந்த் ஆகிய இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது மர்ம ஆசாமிகள் வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளனர். இதுகுறித்து தனித்தனியாக கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்