மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்காமல் இந்தியை திணிக்க முயற்சிப்பதையும், தொகுதி மறுவரையறை செய்து தமிழகத்திற்கு துரோகம் இழைப்பதையும் கண்டித்து திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்கிற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. கூட்டத்திற்கு பகுதி செயலாளர் கவுன்சிலர் நாகராஜ் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான மு.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். இக்கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-
மத்திய அரசு தமிழகத்தின் மீது நிதி நெருக்கடியை உண்டாக்குகிறார்கள். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்குவோம் என பிடிவாதம் பிடிக்கிறார்கள். கடந்த ஆண்டு மூன்று புயல்கள் வந்து தமிழகம் பாதிக்கப்பட்டது. அதற்கு நிவாரண தொகையாக 36,000 கோடி கேட்டபொழுது மத்திய அரசு வெறும் 200 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்தது. அந்தத் தொகையும் மத்திய அரசிலிருந்து பேரிடர் நிவாரண நிதியாக ஒவ்வொரு ஆண்டும் வரவேண்டிய நிதி தான். அதையும் இழுத்தடித்து வழங்கினார்கள். அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் எந்த திட்டமும் நிறைவேற்றப்பட்டதில்லை. அவர்கள் இன்று நம்மை பார்த்து தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்கிறார்கள். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது. அறிவிக்காத வாக்குறுதிகளையும் முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார். தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைக்கும் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றுவதில்லை. தற்போது எம்பி தொகுதிகளை குறைக்க பார்க்கிறார்கள். தொகுதி மறுவரையறையின் மூலம் உத்தரபிரதேசத்தில் 80 லிருந்து 138 தொகுதியாக உயரும். ஆனால் தமிழகத்தில் 39 இல் இருந்து 31 ஆக குறையும். நம்முடைய முதலமைச்சர் நிதிக்காக போராடுகிறார், மொழிக்காக போராடுகிறார், நாடாளுமன்ற தொகுதிக்காக போராடுகிறார். இதன் காரணமாக மத்திய அரசு திமுகவினருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையின் மூலம் சோதனை செய்கிறார்கள். மறுபக்கம் மொழியை திணிக்க பார்க்கிறார்கள், இன்னொரு புறம் நிதி நெருக்கடியை உண்டாக்குகிறார்கள். உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்குகிறார்கள். அந்த நிதியை மக்களுக்கான திட்டங்களுக்கு செலவழிப்பதில்லை மாறாக தங்களுடைய கட்சியையும், ஆட்சியையும் பலப்படுத்துவதற்காக தான் அவர்கள் அந்த நிதியை பயன்படுத்துகிறார்கள். பா.ஜ.க அரசை எதிர்க்கும் மாநிலங்களுக்கு நிதியை தருவதில்லை. மணிப்பூரில் ஒன்றரை ஆண்டுகளாக கலவரம் நடக்கிறது.அங்கு ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டுள்ளார்கள். பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதுவரை பிரதமர் மோடி மணிப்பூர் சென்று பார்க்கவில்லை. அந்த பா.ஜ.க தான் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கூறுகிறார்கள். திமுக அரசு பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் ரூ.5000 கோடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
திமுக அரசு செய்த திட்டங்களால் தான் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் 100% வெற்றியை பெற்று வருகிறோம். ஆகவே அடுத்த தேர்தலிலும் திமுகவை ஆட்சி கட்டிலில் மக்கள் அமர வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்தகூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் தமிழகத்தின் உரிமையை காப்போம், தமிழகம் போராடும் தமிழகம் வெல்லும், என உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் முத்து செல்வம் , மாவட்ட முன்னாள் துணை செயலாளர் குடமுருட்டி சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, பரணிகுமார், மாவட்ட பொருளாளர் துரைராஜ், ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல், பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ், பகுதிச் செயலாளர்கள் மோகன்தாஸ், கமால் முஸ்தபா, காஜாமலை விஜய், ராம்குமார், முன்னாள் பகுதி செயலாளர் தில்லை நகர் கண்ணன், வர்த்தக பிரிவு மாவட்ட அமைப்பாளர் பி.ஆர் சிங்காரம், மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது, வர்த்தக அணி தொழிலதிபர் ஜான்சன்குமார், மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, மாநகரத் துணைச் செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி, மாமன்ற உறுப்பினர்கள் ராமதாஸ், மஞ்சுளா பாலசுப்பிரமணியன், புஷ்பராஜ், கலைச்செல்வி, மகளிர் அணி கவிதா, மதனா, மாவட்ட பிரதிநிதிகள் வக்கீல் மணிவண்ணபாரதி, சோழன் சம்பத், வட்டச் செயலாளர்கள் புத்தூர் பவுல்ராஜ், வாமடம் சுரேஷ், தனசேகர் ,மார்சிங் பேட்டை செல்வராஜ், நிர்வாகிகள் இன்ஜினியர் நித்தியானந்தம், அரவானூர் தர்மராஜன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
Comments are closed.