திமுக எம்பிக்கள் “நாகரீகமற்றவர்கள்” என்று பேசிய மத்திய கல்வி அமைச்சரின் உருவ பொம்மை திருச்சியில் எரிக்கப்பட்டதால் பரபரப்பு…!
மும்மொழி கொள்கையை ஏற்க மறுக்கும் தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி நிதி இன்னும் வழங்கப்படவில்லை. அந்த நிதியை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என கேட்டால் தேசிய கல்விக் கொள்கையையும், மும்மொழி கொள்கையையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு நிர்பந்தம் செய்து வருகிறது. இதுகுறித்து திமுக எம்பிக்கள் இன்று(10-03-2025) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதில் அளித்து பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக மாணவர்களை திமுக அரசு வஞ்சிக்கிறது, மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடிக்கிறது என்று பேசினார். அவரது இந்த பேச்சுக்கு திமுக எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. அப்போது மத்திய கல்வி அமைச்சர், திமுக எம்பிக்கள் நாகரீகமற்றவர்கள் என்று குறிப்பிட்டார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சி மத்திய மாவட்ட திமுகவினர் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் மத்திய கல்வி அமைச்சரின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். மேலும், அவரது புகைப்படத்தை கிழித்து எறிந்தனர். இதில் திருச்சி மத்திய மாவட்ட கழக செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Comments are closed.