தமிழக அரசுக்கு கல்வி நிதி வழங்க மறுப்பது தொடர்பாக திமுக எம்பி, மத்திய அமைச்சர் காரசார விவாதம்- கடும் அமளியால் அவை ஒத்திவைப்பு…!
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (மார்ச் 10) துவங்கியது. அப்போது கல்வி நிதி விவகாரத்தில் தி.மு.க., எம்.பி.,க்கும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கூட்டம் ஜன., 31ல் துவங்கி, பிப்., 13ல் முடிந்தது. இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் இன்று துவங்கி, ஏப்., 4 வரை நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில், முக்கியத்துவம் வாய்ந்த வக்பு மசோதாவை நிறைவேற்ற மத்தியில் ஆளும் பா.ஜ., தீவிரமாக உள்ளது. இதைத்தவிர, பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறுவது, வன்முறைகளால் பாதிக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறுவது மத்திய அரசின் முக்கிய அலுவல் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதேநேரத்தில் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட கூட்டம் இன்று துவங்கியது. மன்றம் கூடியதும் புதிய கல்வி கொள்கை, தமிழகத்திற்கு கல்வி நிதி தொடர்பாக தி.மு.க., எம்.பி., தமிழச்சி தங்க பாண்டியன் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார். அப்போது நாடாளுமன்றத்தில் விவாதம் அனல் பறந்தது.
தி.மு.க., எம்.பி., தமிழச்சி தங்க பாண்டியன் பேசுகையில், தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை மத்திய அரசு வீணாக்குகிறது. கூட்டாட்சிக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. தமிழகத்தில் கல்வி நிதி வழங்க மத்திய அரசு மறுக்கிறது. மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால் மாநில அரசுக்கு நிதி வழங்க மறுப்பது ஏற்க முடியாது. மாநில அரசுக்கு நிதி வழங்க மறுப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றார். இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தி திணிக்கப்படுவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது. பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கூட புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மாணவர்களை தமிழக அரசு தவறாக வழி நடத்துகிறது. தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. மாணவர்களை தமிழக அரசு வஞ்சிக்கிறது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகா, ஹிமாச்சல் ஆகிய மாநில அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்கின்றன. தவறான தகவல்களை தெரிவிப்பதோடு மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைக்கின்றது. மாணவர்களின் எதிர்காலத்தோடு தமிழக அரசு விளையாடுகிறது. மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது துரதிஷ்டவசமானது. யூ-டர்ன் பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை ஏற்பது தொடர்பாக எம்.பி.,க்கள், தமிழக கல்வி அமைச்சருடன் என்னை நேரில் சந்தித்தனர். கடந்த மார்ச் 15ல் பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை ஏற்பதாக தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டத்தை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்ட தமிழக அரசு தற்போது யூ-டர்ன் அடிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, லோக்சபாவில் தி.மு.க., எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. இதன் காரணமாக அவையை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டார்.
Comments are closed.