Rock Fort Times
Online News

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அங்குலம், அங்குலமாக வெடிகுண்டு சோதனை…!( வீடியோ இணைப்பு)

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று(09-03-2025) பூச்சொரிதல் விழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு தன்னை நாடிவரும் பக்தர்கள் அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்பதற்காக அம்மன் 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது சிறப்பாகும். மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று தொடங்கி அடுத்த மாதம் 6-ம் தேதி 28 நாட்கள் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பார். இன்று முதல் வார பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் யானையின் மீது பூத்தட்டு வைத்தும், ஆயிரக்கணக்கானோர் பூத்தட்டுகளை கையில் ஏந்தியும், தேரோடும் வீதியில் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பூக்களை சாற்றி வணங்கினார்கள். பூச்சொரிதல் விழாவை தொடர்ந்து சித்திரை தேரோட்டமும் நடைபெற உள்ளதால் சமயபுரம் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

பூச்சொரிதல் விழா மற்றும் தேரோட்ட விழாவில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், பாதுகாப்பு கருதி வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் கோவிலின் தேரோடும் வீதி, கோவிலின் உட்புறம் உள்ளிட்ட பகுதிகளில் நவீன கருவிகள் மூலம் அங்குலம், அங்குலமாக வெடிகுண்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ADVERTISEMENT…👇

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்