நாளை ( பிப்.24 ) முதல் பயன்பாட்டிற்கு வரப்போகும் முதல்வர் மருந்தகங்கள் ! என்னென்ன ஸ்பெஷல்- எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2024-ம் ஆண்டு ஆக.15-ம் தேதி சுதந்திர தினவிழா உரையில், ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் தமிழகம் முழுவதும் தொடங்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி, தமிழகம் முழுவதும் பி.பார்ம், டி.பார்ம் படித்தவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதல் பெற்றவர்கள் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டு உரிமங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும் தொழில் முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் என மொத்தம் ஆயிரம் மருந்தகங்கள் திறக்கப்படுகிறது. சென்னையில் 33 இடங்களிலும் மதுரையில் 52 ,கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 என முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான மருந்துகள் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் கொள்முதல் செய்யப்படும். தேவை ஏற்பட்டால் வெளிச்சந்தையிலும் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டில் முதல்வர் மருந்தகம் திறக்கும் தொழில் முனைவோருக்கு 3 லட்சம் ரூபாய் வரை அரசு மானியமாக வழங்குகிறது. இதில் 50 சதவீத தொகையானது ரொக்கமாகவும் மீதமுள்ள 50 சதவீதம் மருந்துகள் வடிவத்திலும் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு விழா நாளை ( பிப்.24 ) காலை நடக்கிறது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இங்கு வெளி மார்க்கெட் விலையை விட 25 % தள்ளுபடி விலையில் மருந்துகளை வாங்கி பொதுமக்கள் பயனடைய முடியும்.
Comments are closed.