கிருஷ்ணகிரியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம்: போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற 2 பேரை சுட்டு பிடித்த போலீசார்… !
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் மலை உள்ளது. இந்த மலைக்கு கடந்த 19-ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த 35 வயது ஆணும், 30 வயது மதிக்கத்தக்க பெண்ணும் சென்றனர். அவர்கள் மலையின் உச்சிக்கு சென்றபோது அங்கு 4 இளைஞர்கள், மது போதையில் அமர்ந்திருந்தனர். மலை உச்சிக்கு தனியாக வந்த இருவரையும் கத்தி முனையில் மிரட்டிய போதைக் கும்பலைச் சேர்ந்தவர்கள், அந்தப் பெண்ணிடம் இருந்து தங்க நகைகளையும், பணத்தையும் பறித்துள்ளனர். பின்னர், அந்தக் கும்பலைச் சேர்ந்த இருவர், அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணும், ஆணும் பதற்றத்துடன் மலையில் இருந்து இறங்கி வந்து, மலையடிவாரத்தில் இருந்த சிலரிடம் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். ஆனால் காவல் துறையில் புகார் அளிக்கவில்லை. இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி எஸ்.பி. தங்கதுரை, தனிப்படை அமைத்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, கிருஷ்ணகிரி டவுன் மற்றும் தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், பெண்ணை மிரட்டி பணம், நகை வழிப்பறி செய்தது கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியை சேர்ந்த கலையரசன் (21), அபிஷேக் (20) என்பதும், பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தது கிருஷ்ணகிரியை சேர்ந்த சுரேஷ் (22), நாராயணன் (21) என்பதும் தெரிய வந்தது.இதையடுத்து கலையரசன், அபிஷேக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த சுரேஷ், நாராயணன் ஆகியோரை போலீஸார் தேடி வந்த நிலையில், தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன்மலைகுட்டை பெருமாள் கோயில் பகுதியில் அவர்கள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்பிரபு, எஸ்ஐ பிரபாகர் மற்றும் காவலர்கள் குமார், விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீஸாரை கண்டதும் சுரேஷ், நாராயணன் ஆகியோர் தாங்கள் வைத்திருந்த கத்தியால் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது, அவர்களில் ஒருவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். மற்றொருவருக்கு காலில் எலும்பு முறிந்தது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த எஸ்.பி .தங்கதுரை, ஏடிஎஸ்பி சங்கர், டிஎஸ்பி முரளி ஆகியோர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கத்தியால் குத்தியதில் காயம் அடைந்த போலீஸார் குமார், விஜயகுமார் மற்றும் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட சுரேஷ், கால் முறிவு ஏற்பட்ட நாராயணன் ஆகியோரை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.