நாம் தமிழர் கட்சியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் விலகல்: தமிழக வாழ்வுரிமை கட்சியில் ஐக்கியம்…!
திருச்சியில், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய நூற்றுக்கும் மேற்பட்டோர் மூத்த வழக்கறிஞரும், தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான இரா.பிரபு தலைமையில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ முன்னிலையில் இன்று(16-02-2025) அக்கட்சியில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களை வேல்முருகன் எம்.எல்.ஏ. சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டு இருப்பது கண்டனத்துக்குரியது. மும்மொழி கொள்கை ஏமாற்றும் கொள்கை ஆகும். தாய்மொழி கொள்கை தான் உலகத்தில் தலை சிறந்த கொள்கை. தற்போது ஆங்கிலம் உலகம் முழுவதும் பேசும் மொழியாக இருப்பதால் அதனை கற்று கொள்ள வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழ் ஆட்சி மொழியாகவும், ஆளும் மொழியாகவும் இருக்க வேண்டும். இதனை தமிழக அரசு நடைமுறைப்படுத்துகிறதா? என்ற கேள்வி வைக்கிறேன். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று சொல்லும் தமிழ் நாட்டில் எங்கே தமிழ் என்று தேடுகிற நிலைமை இருக்கிறது. தமிழ்நாடு அரசு அலுவலகங்கள், உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழ் மொழியில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் போதை பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது. போதை பொருள் விற்பனை செய்பவர்கள், பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை வழங்கும் கடுமையான சட்ட மசோதாவை வருகின்ற சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும். தமிழக வாழ்வுரிமை கட்சி TVK என தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம், தற்பொழுது விஜய் கட்சி TVK என்று பதிவு செய்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதி உள்ளேன். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எதற்காக கட்சி ஆரம்பித்தார். மக்கள் நலனுக்காக ஆரம்பித்தாரா? அல்லது பின்னால் இருந்து யாரோ தூண்டுதலின்பேரில் கட்சி ஆரம்பித்தாரா? என்பது வருகின்ற காலங்களில் தெரியவரும். மேலும், ஒரு சொட்டு மது இல்லாத தமிழ்நாடு என்பது தான் எங்களது கொள்கை என்றார்.
Comments are closed.