வானமே கூரை… மரத்தடியே வகுப்பறை… நம்ம துறையூரில் உள்ள அரசு பள்ளியின் அவல நிலைதான் இது…! (வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மலைப் பிரதேசமான பச்சைமலை பகுதியில் ராமநாதபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 1964ம் ஆண்டு முதல் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 20- க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தற்போது தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இந்தப் பள்ளியில் பார்த்திபன் என்ற ஆசிரியர் மட்டுமே உள்ளார். இந்த பள்ளிக் கட்டிடமானது சேதம் அடைந்த காரணத்தினால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆகியும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, வானமே கூரையாக கொண்ட இந்த பள்ளி மாணவ- மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். மழைக்காலங்களில் மாணவ, மாணவிகள் ஒதுங்க கூட இடம் இல்லாததால் அந்த நாட்களில் பள்ளிக்கு விடுமுறை விடப்படுகிறது. இதனால் மாணவ- மாணவிகளின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. மேலும், அறிவுசார் கல்வி இரண்டு ஆண்டுகளாக கற்றுத்
தரப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
Comments are closed.