திருச்சி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: ரூ.18.63 கோடி செலவில் கட்டப்பட்ட பறவைகள் பூங்காவை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…! (வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் பகுதியில் முக்கொம்பு சுற்றுலா மையம் அமைந்துள்ளது. இங்கு திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் சென்று வருகின்றனர். இந்த இடத்தைத் தவிர வேறு பெரிய அளவில் சுற்றுலா இடம் எதுவும் இல்லை. இதனை கருத்தில் கொண்ட திருச்சி மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.18.63 கோடி மதிப்பீட்டில் காவிரி ஆறு அய்யாளம்மன் படித்துறை பகுதியில் 1.63 ஹெக்டேர் பரப்பளவில் பறவைகள் பூங்கா அமைக்க திட்டமிட்டது.இதற்கான பணிகள் கடந்த 2023 ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. அந்த பணியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.அந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் அதன் திறப்பு விழா இன்று(09-02-2025) நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பறவைகள் பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டதோடு பறவைகளுக்கு இரை வைத்து மகிழ்ந்தார். அப்போது சில பறவைகள் அவர் கைகளில் ஏறி அமர்ந்தன. அப்போது அங்கு இருந்தவர்கள் இதனை பார்த்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். திறப்பு விழாவின் போது அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் சரவணன், சட்டமன்ற உறுப்பினர்கள் செளந்திர பாண்டியன், தியாகராஜன், பழனியாண்டி, ஸ்டாலின் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த பறவைகள் பூங்காவில் பல்வேறு சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமன்றி தமிழ்நாட்டை சேர்ந்த மக்கள் இந்த பூங்காவை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.தொடர்ந்து செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த அவர், டெல்லி தேர்தலில் அம்மாநில மக்கள் அவர்கள் விருப்பபடி முடிவெடுத்து வாக்களித்துள்ளார்கள் என்றார்.இந்த பறவைகள் பூங்காவில் 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவை இனங்கள், மீன் இனங்கள், பாம்புகள், ஈமு கோழிகள், பல வகையான வாத்துகள், முயல்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மேலும் குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை என செயற்கையாக ஐந்து நிலங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. மலைகள், காடுகள் கடற்கரை சமவெளி மற்றும் பாலைவனம் போன்றவை தத்ரூபமாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது. புல்வெளிகள், சிற்பங்கள், நீருற்றுகள், ஜல்லிகட்டு காளை, முதலை போன்றவற்றின் சிலைகள், பிரமிட் என பல வியக்கத்தக்க அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. 7 – டி மினி தியேட்டர் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் 50 பேர் அமர்ந்து அறிவியல் பூர்வ படங்களை பார்க்கலாம். திருச்சி மாவட்டத்தில் சுற்றுலா தளங்கள் மிக குறைவாக உள்ள நிலையில் இந்த பூங்கா சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான ஒரு இடமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
Comments are closed.