Rock Fort Times
Online News

திருச்சி நீதிமன்றம் எதிரே உள்ள குழுமிக்கரை வாக்கிங் சாலையில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு – மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா?

திருச்சி நீதிமன்றம் அருகே எம்ஜிஆர் சிலை அமைந்திருக்கும் எதிர்புறம் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரை பகுதியில் வண்ணாரப்பேட்டையில் இருந்து வயலூர் செல்லும் குழுமிக்கரை சாலை ஒன்று உள்ளது. இந்த சாலைக்கு வாக்கிங் சாலை என்று திருச்சி மாநகராட்சி பெயரிட்டுள்ளது. இந்த சாலையில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலை வழியாக அதிகாலை நேரங்களில் புத்தூர், வண்ணாரப்பேட்டை, கல்லாங்காடு, கருமண்டபம், வயலூர் போன்ற பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும்
ஆண்கள், பெண்கள் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் வாக்கிங் சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலையில் கோழி கழிவுகள் மற்றும் மீன், இறைச்சி கழிவுகளை ஒரு சிலர் இரவு நேரங்களில் மூட்டை, மூட்டையாக வாகனங்களில் கொண்டு வந்து கொட்டி விட்டு சென்று விடுகின்றனர். இதில் உள்ள கழிவுகளை சாப்பிடுவதற்காக தெரு நாய்கள் தினமும் கூட்டம், கூட்டமாக வருகின்றன. இதனால், இப்பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக வாக்கிங் செல்பவர்கள் பயந்து பயந்து தான் சென்று வருகின்றனர். மேலும், இறைச்சி கழிவுகள் முறையாக அகற்றப்படாததால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.  இந்த சாலைப் பகுதியில் வண்ணாரப்பேட்டை, கல்லாங்காடு போன்ற ஏரியாக்கள் மற்றும் கமலா நிகேதன் பள்ளி ஆகியவையும் உள்ளன. இதனால் வாக்கிங் செல்பவர்கள் மட்டுமின்றி அந்த ஏரியா மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வயலூர் வசந்தம் வாக்கிங் குரூப் தலைவர் தனசேகர், செயலாளர் ஞானசேகர், பொருளாளர் பாண்டியன் ஆகியோர் கூறுகையில், இந்த சாலை வழியாக நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் வாக்கிங் சென்று வருகிறோம். இந்த சாலைப் பகுதியில் இரவு நேரங்களில் யாரோ இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து கொட்டி விட்டு சென்று விடுகின்றனர். அந்த கழிவுகள் முறையாக அகற்றப்படாததால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இந்த இறைச்சி கழிவுகளை சாப்பிடுவதற்காக தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக இந்த பகுதியில் சுற்றித் திரிகின்றன. இதனால், வாக்கிங் செல்லவே அச்சமாக இருக்கிறது.தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்த சாலையில் கொட்டப்பட்டுள்ள இறைச்சி கழிவுகளை உடனடியாக அகற்றவும், இனிமேல் இந்த பகுதியில் கழிவுகளை கொட்டும் நபர்களை மாநகராட்சி ஆணையர் சரவணன் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்