Rock Fort Times
Online News

ராணிப்பேட்டை காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: சட்டம்- ஒழுங்கு எங்கே? கேட்கிறார் இபிஎஸ்…!

ராணிப்பேட்டை, சிப்காட் காவல் நிலையம் மீது பைக்கில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பியோடினர். அப்போது காவல் நிலையத்தின் இரும்பு கேட் பூட்டப்பட்டு இருந்ததால் அதன் மீது பெட்ரோல் குண்டு விழுந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. என்னதான் நடக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சியில்? ஒரு ஏடிஜிபி, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டதாக சொல்வதும், காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவதும் தான் சட்டம், ஒழுங்கு காக்கப்படும் அரசா?. நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், இப்படி ஒரு தறிகெட்ட ஆட்சி நடத்திவிட்டு, ‘சட்டம் ஒழுங்கை சிறப்பாக தான் நடத்தி வருகிறேன்’ என்று வாய் கூசாமல் பச்சைப்பொய் பேசுகிறார் ஸ்டாலின். காவல் நிலையம் கூட பாதுகாப்பான இடம் இல்லை என்ற நிலைக்கு சட்டம், ஒழுங்கை படுபாதாளத்திற்கு தள்ளிவிட்ட ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம். காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களைக் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ். கூறியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்