சென்னையில் உள்ள புரசைவாக்கம் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட 5 இடங்களில் ஜனவரி 28ம் தேதி காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (N.I.A) சோதனையில் ஈடுபட்டனர். அதே போன்று மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் என்ற பகுதியில் 15 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில், மயிலாடுதுறை திருமுல்லைவாசல் பகுதியைச் சேர்ந்த அல்பாசித் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் சென்னையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றிக் கொண்டே ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இக்மா சாதீக் என்பவருடன் தொடர்பில் இருந்ததாகவும் தகவல் வெளியானது. இந்தநிலையில், மீண்டும் தமிழகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று(03-02-2025) சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, திருவாரூர் உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டது தொடர்பாக திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஆசாத் தெருவில் உள்ள பாபா பக்ருதீன் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.