2021 சட்டமன்ற தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும், பல ஆண்டு காலமாக சம்பளம் இல்லாமல் கூப்பிட்டவுடன் வந்து பணியாற்றும் மின் வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலி வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருச்சி மண்டலம் சார்பில் தென்னூர் தலைமை பொறியாளர் அலுவலகம் முன் இன்று(23-01-2025) தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் ரங்கராஜன் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர்கள் டி.பழனியாண்டி (திருச்சி), பி.நடராஜன் (புதுக்கோட்டை), எம். பன்னீர்செல்வம் (பெரம்பலூர்), ஆர்.திருமலைசாமி (திண்டுக்கல்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி மண்டல செயலாளர் எஸ்.அகஸ்டின் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். போராட்டத்தின் போது பிரிவு அலுவலகங்களிலும், உபமின் நிலையங்களிலும் ஒப்பந்ததாரர் மூலமாக தினக்கூலி வழங்கி ஒப்பந்த தொழிலாளர்களை நியமிப்பதை கைவிட்டு, காலிப்பணியிடங்களில் நேரடியாக மின் வாரியமே ஒப்பந்த ஊழியர்களை பணி அமர்த்தி தினக்கூலி வழங்க வேண்டும். நுகர்வோருக்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் அன்றாட பணிகள் செய்யும் கீழ்மட்ட பணியிடங்களை பூர்த்தி செய்யாததால் வேலை பளுவை சுமப்பதால் தினம், தினம் விபத்து, உயிர்ப்பலி ஏற்படுவதை தடுத்திட ஒப்பந்த ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மின்வாரிய ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் திருச்சி வட்டத்தலைவர் நடராஜன் நன்றி கூறினார்.
Comments are closed.