திருச்சி மாநகராட்சியுடன் 22 கிராம ஊராட்சிகள் இணைக்கப்படவுள்ள நிலையில், 100 வார்டுகள் கொண்டதாக மாநகராட்சியை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 65 வார்டுகளும், கோ.அபிஷேகபுரம், அரியமங்கலம், பொன்மலை, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் என 5 கோட்டங்களும் உள்ளன. இந்நிலையில், திருச்சி மாநகராட்சியை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, திருச்சி மாநகராட்சியுடன், அருகில் உள்ள மல்லியம்பத்து, கம்பரசம்பேட்டை, மருதாண்டாக்குறிச்சி, முத்தநரசநல்லூர், அதவத்தூர், அல்லித்துறை, கே. கள்ளிக்குடி, குமாரவயலூர், நாச்சிக்குறிச்சி புங்கனூர், சோமரசம்பேட்டை குண்டூர், கீழக்குறிச்சி, கும்பக்குறிச்சி பகுதி 3-ஆவது வார்டு முதல் 6-ஆவது வார்டு வரை, நவல்பட்டு பகுதி 4-ஆவது வார்டு முதல் 15-ஆவது வார்டு வரை, அப்பாதுரை, தாளக்குடி, வாளாடி. நெருஞ்சவக்குடி, கூத்தூர், மாதவபெருமாள் கோயில் பிச்சாண்டவர் கோயில் ஆகிய 22 ஊராட்சிகள் இணைக்கப்படவுள்ளன. இதையடுத்து மாநகராட்சியின் தற்போதைய 65 வார்டுகள் என்பது 100 வார்டுகளாக உயரும். மேலும், வார்டுக்குள்பட்ட பகுதிகளும் மாற்றம் பெறும்.
இதுதொடர்பாக, மாநகராட்சி ஆணையர் வே. சரவணன் கூறியதாவது: மாநகராட்சி பகுதியை விரிவாக்கம் செய்வதற்காக அரசாணை வெளியிட்டு 2 நாள்கள் தான் ஆகின்றன. முதலில் எந்தெந்தப் பகுதிகள் மாநகராட்சியுடன் இணைகிறது என்பதற்கான உத்தேசமாக 22 கிராம ஊராட்சிகளை தேர்வு செய்துள்ளோம். இவை அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு மாநகராட்சி சார்பில் கடிதம் அனுப்பப்படும். விரிவாக்கம் செய்யப்பட்ட விவரம் மற்றும் அதன் அனைத்து உள்கட்டமைப்புகள் குறித்து தெரிவிக்கப்படும். இதையடுத்து, மாநில தேர்தல் ஆணையத்தால் மாநகராட்சி வார்டுகளை மறுவரையறை செய்வதற்கான குழு அமைக்கப்படும். இந்தக் குழுவானது மாநகருக்கு எத்தனை வார்டுகள் என்பதை இறுதி செய்யும். தற்போதைய மாமன்றக் குழுவின் பதவிக்காலம் 2026 வரை உள்ளது. அதற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஒவ்வொன்றாக நடைபெறும். 2026-ல் நடைபெறும் மாநகராட்சி தேர்தலானது, புதிய வார்டுகளுடன், மறுவரையறை செய்யப்பட்ட பகுதிகளை உள்ளடக்கியதாக நடைபெறும். புதிதாக இணைந்துள்ள ஊராட்சிப் பகுதி மக்களுக்கு ஏற்கெனவே கிடைத்து வந்த வசதிகளைவிட மிகவும் பயனுள்ள, மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கும் என்றார் .

Comments are closed.