தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, மெல்ல நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் 18 செ.மீ, தலைஞாயிறு 14 செ.மீ, வேளாங்கண்ணியில் 13 செ.மீ, மதுராந்தகம், சென்னை கொளத்தூரில் 11 செ.மீ மழை பொழிவு பதிவாகி உள்ளது. சென்னையில் விடிய விடிய தொடரும் மழையால் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், சென்னையில் இருந்து புறப்படும் 3 விமானங்கள், சென்னைக்கு வரும் 3 விமானங்கள் என மொத்தம் 6 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல், பழவந்தாங்கல் சுரங்கப்பாதை மற்றும் அரங்கநாதன் சுரங்கப்பாதை மழை காரணமாக தற்போது மூடப்பட்டுள்ளது என சென்னை போக்குவரத்து போலீசார் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இதனிடையே சென்னையில் நேற்றிரவு முதல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் தெருக்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர், மேம்பாலங்களில் தங்களது கார்களை பார்க்கிங் செய்ய தொடங்கி உள்ளனர். இதன்படி சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் ஏராளமான கார்களை அதன் உரிமையாளர்கள் நிறுத்தி வருகின்றனர். அதேபோல், ராயபுரம் மேம்பாலமும் கார் பார்க்கிங்காக மாறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் கடந்த ஆண்டுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் கார் உரிமையாளர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கிய கார்கள் பழுதாகி, பல லட்சம் ரூபாய் செலவழிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் சமீப காலமாக, அதி கனமழை என்ற அறிவிப்பு வந்த உடனே மக்கள் தங்களது கார்களை மேம்பாலங்களில் நிறுத்தி வருகின்றனர்.
Comments are closed.