Rock Fort Times
Online News

ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை நயன்தாரா மீது தனுஷ் வழக்கு; பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு…!.

‘நயன்தாரா ஆவணப்படத்தில் தான் தயாரித்த படத்தின் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் ரூ.10 கோடி கேட்டு தனுஷ் தொடர்ந்த வழக்கில், நயன்தாரா-விக்னேஷ் சிவன் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் பிரபல ஓடிடி தளத்தில் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ என்ற பெயரில் ஆவணப்படமாக நவம்பர் 18ல் வெளியாகி உள்ளது. படத்தில், ‘நானும் ரவுடிதான்’ பட பாடல் காட்சிகளை சேர்ந்த தயாரிப்பாளரான நடிகர் தனுஷிடம் தடையின்மை சான்று கோரினர். ஆனால், அவர் பதில் எதுவும் சொல்லவில்லை. இரண்டு ஆண்டுகளாக பதில் சொல்லாமல், தடையின்மை சான்றும் தராமல் இருந்ததால் ஆத்திரம் அடைந்த நயன்தாரா, தனுஷை விமர்சித்து அறிக்கை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட மூன்று வினாடி காட்சி, ஆவணப்படத்தின் டீசரில் இடம் பெற்றதாகவும், அதற்கு 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வேண்டும் என்று கோரி தனுஷ் நோட்டீஸ் அனுப்பியதாகவும் நயன்தாரா கூறியிருந்தார். ஆனால், தனுஷ் தரப்பின் ஆட்சேபத்தை பொருட்படுத்தாமல், குறிப்பிட்ட அந்த மூன்று வினாடி காட்சியுடன் ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டு விட்டது. இந்நிலையில், இன்று (27-11-2024) தனுஷ் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். நயன்தாரா ஆவணப்படத்தில் தான் தயாரித்த படத்தின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு தன்னிடம் அனுமதி பெறவில்லை. எனவே ரூ.10 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்