பெண் என நினைத்து ஆணிடம் ஆன்லைனில் சாட்டிங் செய்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை இழந்த லாரி டிரைவர்- இன்ஜினியர் கைது…!
அரியலூர் பெரியகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த்குமார். டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்துள்ள இவர், சமூக வலைத்தள பக்கமான முகநூல் பக்கத்தில் ஸ்ரேயா என்ற பெண் பெயரில் போலி கணக்கு ஒன்று தொடங்கி அதன் மூலம் பலருக்கு வலை விரித்து வந்துள்ளார். அவரது வலையில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த மணிமாறன் என்ற டிரைவர் விழுந்தார். மணிமாறன், அவர் பெண் என நினைத்து சாட்டிங் செய்து வந்துள்ளார். அந்தவகையில் மணிமாறனிடம் பல்வேறு கட்டங்களாக ரூ.1லட்சத்து 60 ஆயிரம் வரை பிரசாந்த்குமார் பறித்தது தெரிய வந்தது. ஒரு கட்டத்தில் மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் இது தொடர்பாக அவர் விசாரித்துள்ளார். அப்போது பிரசாந்த் குமார் பெண் போல முகநூலில் பழகி ஏமாற்றியது தெரிய வந்தது. இதுதொடர்பாக மணிமாறன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரசாந்த்குமாரை கைது செய்தனர். விசாரணையில் அவர் இதேபோன்று பெண் போல சாட்டிங் செய்து பலரிடம் பணம், நகை பறித்தது தெரிய வந்துள்ளது. அவர் யார்-யாரிடம் பணம், நகைகளை பறித்தார் என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Comments are closed.