Rock Fort Times
Online News

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி…!

உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து ரங்கநாதரை தரிசித்து செல்கின்றனர்.  இக்கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. அதில் முதன்மை வாய்ந்தது வைகுண்ட ஏகாதசி விழா. இந்த விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கமாகும். அந்தவகையில் இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 30-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி ஜனவரி 20 -ந்தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 31-ந்தேதி பகல்பத்து உற்வசம் தொடங்குகிறது. ஜனவரி 9-ந்தேதி மோகினி அலங்காரமும், 10-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு விழாவும் நடைபெறுகிறது. 16-ந்தேதி திருக்கைத்தல சேவையும், 17-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 19-ந்தேதி தீர்த்தவாரியும், 20-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது. விழாவையொட்டி ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே பந்தல் கால் நடும் நிகழ்ச்சி இன்று(14-11-2024) காலை 10.45 மணி அளவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது ஆயிரங்கால் மண்டபத்தில் கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல மேள, நாதஸ்வரங்கள் ஒலிக்க கோவில் யானை ஆண்டாள் ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் நின்றபடி மரியாதை செலுத்தியது. அதுசமயம் முகூர்த்த பந்தல்காலில் புனிதநீர் ஊற்றி, சந்தனம், மாவிலை மற்றும் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பந்தக்காலை கோவில் பணியாளர்கள் நட்டனர். இதனை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபம் அருகே கூடுதல் பந்தல் கால்கள் ஊன்றி திருக்கொட்டகை அமைக்கும் பணி நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கண்காணிப்பாளர்கள் வெங்கடேசன், சக்திவேல், கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்