தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்துள்ள சூரியனார்கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள் கடந்த மாதம் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு பெண்ணை பதிவுத் திருமணம் செய்து கொண்டார். அவர், மரபுகளை மீறி திருமணம் செய்து கொண்டதால் ஆதீனகர்த்தர் பதவி வகிக்க தகுதி இழந்துவிட்டதாக ஆதீனத்தின் ஸ்ரீ காரியங்களில் ஒருவரான சுவாமிநாத சுவாமிகள் தெரிவித்திருந்தார். இதையடுத்து, அவரை ஆதீனத்தில் இருந்து நீக்குவதாக நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில், சூரியனார்கோவில் மடத்துக்கு வந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர், மடத்தை விட்டு மகாலிங்க சுவாமிகள் வெளியேற வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து மடத்தில் இருந்த பூஜை பொருட்கள் உள்ளிட்ட சிலவற்றை எடுத்துக் கொண்டு மடத்தை விட்டு மகாலிங்க சுவாமிகள் வெளியே வந்தார். அதை சிலர் பறித்துக்கொண்டு மடத்தின் வாசல் கதவை பூட்டினர். இதையடுத்து மகாலிங்க சுவாமிகள் அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலக வாசலில் நாற்காலியை போட்டு அமர்ந்தார். அப்போது அவருக்கு ஆதரவாக கிராம மக்களில் மற்றொரு தரப்பினர் பேசினர். இதனால், இரு தரப்பி னருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் இருதரப்பையும் சமாதானப்படுத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினர். பின்னர், ஆதீன நிர்வாக பொறுப்புகளை இந்து சமய அறநிலைய துறை செயல் அலுவலர் ஆறுமுகம், ஆய்வாளர் அருணா ஆகியோரிடம் ஒப்படைப்பதாக மகாலிங்க சுவாமிகள் கடிதம் வழங்கினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஆதீனத்தின் நிர்வாகப் பொறுப்புகளை மட்டும் தான் செயல் அலுவலரிடம் ஒப்படைத்துள்ளேன். 28-வது குருமகா சந்நிதானமாக தொடர்ந்து நீடிப்பேன்” என்றார்.
Comments are closed.