Rock Fort Times
Online News

தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று திங்கட்கிழமை முதல் இயக்கம்…!

தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று(28-10-2024) முதல் இயக்கப்படுகிறது.  தீபாவளி பண்டிகை வருகிற 31-ம் தேதி( வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு  பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.  இந்நிலையில் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 4 ஆயிரத்து 900 சிறப்பு பேருந்துகள், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 2 ஆயிரத்து 910 சிறப்பு  பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இன்று வழக்கமான பேருந்துகளுடன் சென்னையில் இருந்து 700 பேருந்துகளும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பிற முக்கிய பகுதிகளுக்கு 330 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த 3 நாட்களுக்கு 14 ஆயிரத்து 086 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு பேருந்துகளில் பயணிக்க இதுவரை 1.22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் இருந்து மட்டும் பேருந்துகள் வாயிலாக 5 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கிளாம்பாக்கத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “கிளாம்பாக்கத்தில் அரசு பேருந்துகள், ஒப்பந்த அடிப்படையிலான தனியார் பேருந்துகள், ஆம்னி  பேருந்துகளை நிறுத்திவைக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2 ஆயிரம் பேர் அமர இருக்கை, இலவச மருத்துவமனை, ஆம்புலன்ஸ், பாதுகாப்புக்காக காவல் அதிகாரிகள், 3 மடங்கு அதிகமாக தூய்மை பணியாளர்கள், 8 ஏடிஎம் இயந்திரங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் 18 இயந்திரங்கள், தாய்மார்கள் பாலூட்ட 3 அறைகள், இலவச டிராலிகள், 140 தங்குமிடம் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் நெரிசல் இல்லாமல் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்