சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தடைந்தது. அதில் பயணித்த சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூர் பாரி நகரைச் சேர்ந்த நரசிங்கம் மனைவி பழனியம்மாள் (59) நடைமேடையிலிருந்து தனது உடைமைகளுடன் வெளியே வந்தார். நுழைவாயில் பகுதியில் வந்து பார்த்த போது அவரது உடைகளில் வைக்கப்பட்டிருந்த நகை, ஆதார் மற்றும் வங்கி ஏடிஎம் அட்டைகள் வைக்கப்பட்டிருந்த கைப்பை திருட்டுப் போய் இருந்தது தெரியவந்தது. அப்போது அவர் அருகில் ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்கள் அங்கு நடமாடியது நினைவுக்கு வந்தது. இதுகுறித்து ஜங்ஷன் ரயில்வே காவல் நிலையத்தில் பழனியம்மாள் புகார் அளித்தார். புகாரின் பேரில், ரயில் நிலைய காவல் ஆய்வாளர் மோகனசுந்தரி தலைமையிலான ரயில்வே போலீசார் ஒப்பந்த தொழிலாளர்களை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், சிறுகமணியைச் சேர்ந்த பெண் ஊழியர் வசந்தி (30) என்பவர் நகைப்பையை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து வழக்குப் பதிந்த ரயில்வே போலீசார் வசந்தியை கைது செய்தனர். அவரிடம் இருந்த 16 பவுன் நகைகள், செல்போன் மற்றும் வங்கி, ஆதார் அட்டைகள் மீட்கப்பட்டன.
Comments are closed.