Rock Fort Times
Online News

பெரியார், அண்ணா பெயரைச் சொல்லி திராவிட மாடல் என்று ஏமாற்றும் கூட்டம்:2026 தேர்தலில் ஒவ்வொரு ஓட்டும் அணுகுண்டாக மாறும்… விஜய் மாஸ் ஸ்பீச்!…

நடிகர் விஜய் தன்னுடைய முதல் அரசியல் மாநில மாநாட்டில் ரொம்ப வெளிப்படையாகவே தன் மீது இருந்த எல்லா கேள்விகளுக்குமே நெத்தி பொட்டில் அடித்தது போல  பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.  தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் இன்று(27-10-2024) மாலை நடைபெற்றது.  பொறுமையாக பேசும் நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் மாநாட்டில்  தொடக்கம் முதலே அதிர விட்டு இருக்கிறார்.  விஜய் பேசும்போது, பெரியார் எங்கள் கொள்கை தலைவர். ஆனால் அவர் தெரிவித்த கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நான் எடுக்க போவதில்லை. அதில் தங்களுக்கு உடன்பாடும் இல்லை. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவு சிந்தனை உள்ளிட்ட பெரியார் சொன்ன இவை அனைத்தையும் நாங்கள் முன்னெடுக்க போகிறோம். மதச்சார்பின்மைக்கும், நேர்மையான நிர்வாக செயல்பாட்டிற்கும் முன் உதாரணமாக இருக்கும் பச்சை தமிழர் பெருந்தலைவர் காமராஜரை எங்கள் வழிகாட்டியாக ஏற்கிறோம். அடுத்தது எங்கள் கொள்கை தலைவர் அண்ணல் அம்பேத்கர். சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துபவர்கள் அம்பேத்கர் பெயரை கேட்டாலே நடுங்கிப் போய் விடுவார்கள்.  அவரை எங்கள் வழிகாட்டி என்று சொல்வதில் பெருமை கொள்கிறோம். பெண்களை கொள்கை தலைவர்களாக ஏற்று களத்தில் வரும் முதல் அரசியல் கட்சி தமிழக வெற்றி கழகம் தான். அந்த வகையில் நாம் இந்த மண்ணை கட்டி ஆண்ட பேரரசி வேலு நாச்சியார், இந்த மண்ணின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட அஞ்சலை அம்மாள் இருவரும் நம்முடைய கொள்கை தலைவர்கள்.  அரசியல் போரில் சமரசமே இல்லை. வெறுப்பு அரசியலை எப்போதும் கையில் எடுக்க மாட்டோம்.  எதை நினைத்து அரசியலுக்கு வந்தோமோ அதை பிசிர் இல்லாமல் செய்து முடிக்கும் வரை நெருப்பாக இருப்போம்.

சினிமாவில் நடிக்கலாம், பணம் சம்பாதிக்கலாம் என்றுதான் முதலில் நினைத்தேன்.  ஆனால் வாழவைத்த மக்களுக்காக நான் என்ன செய்யப் போகிறேன் என்று தினமும் என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. இதற்கு சரியான களம் எது என்று நினைத்த போதுதான் என் மனதில் தோன்றியது அரசியல். என்னிடம் இருப்பது உண்மை, உழைப்பு, நேர்மை தான். உங்களை மட்டுமே நம்பி வந்திருக்கிறேன். இந்த கலர், அந்த கலர் பூசுவது என  மோடி மஸ்தான் வேலையை செய்தாலும் ஒன்னும் நடக்கப் போவதில்லை.  பெரியார், அண்ணா பெயரைச் சொல்லி திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப ஆட்சியை நடத்துகிறார்கள். மக்கள் விரோத ஆட்சியை நடத்திவிட்டு திராவிட மாடல் என ஏமாற்றுகிறார்கள். குடும்ப சுயநல கூட்டம் தான் நம்ம அடுத்த எதிரி. வீடு, உணவு, வேலை இவை மூன்றுமே அடிப்படை தேவை.  இதை கொடுக்க முடியாத அரசு இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? .சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அதுதான் சமூக நீதிக்கான முதல் படியாக இருக்கும். என் கேரியர் உச்சத்தில் இருந்த போதும் அந்த ஊதியத்தை உதறிவிட்டு உங்கள் முன்பு வந்து நிற்கிறேன். நம்மள பார்த்து யாரும் விசில் அடிச்சான் குஞ்சு என்று சொல்லிட கூடாது.  வேகமானவர்கள், விவேகமானவர்கள் என பாராட்டும் வகையில் செயல்பட வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு ஓட்டும் அணுகுண்டாக மாறும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்