விக்கிரவாண்டியில் இன்று த.வெ.க. முதல் மாநில மாநாடு; சாரை, சாரையாக குவியும் தொண்டர்கள்- நிரம்பி வழியும் மாநாட்டு திடல்…!
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இவர் திடீரென்று, தான் இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும், அரசியல் கட்சி தொடங்கி மக்கள் சேவையாற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார். அதன்படி அவர் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தினார். 2026 சட்டமன்றத் தேர்தல் தான் நம் இலக்கு என்று கட்சி பணியாற்றி வரும் அவர் தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் இன்று 27-10- 2024( ஞாயிற்றுக்கிழமை) பிரம்மாண்டமான முறையில் நடத்துகிறார். மாநாட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளன. 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டை திடல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு செல்வதற்கு ஐந்து நுழைவு வாயில்களும், வெளியே செல்வதற்கு 15 வழிப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேடையின் இரு புறங்களிலும் பெரியார், காமராஜர், அம்பேத்கர் மற்றும் தமிழ் அன்னை, வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள், சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் கட் அவுட்டுகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
மாநாட்டில் சினிமா நடிகர்- நடிகைகளும் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தற்போது 6 கேரவன்கள் மாநாட்டு திடலில் தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளனர். ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், விஜயின் பேச்சை கேட்பதற்காகவும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் தொண்டர்கள் சாரை, சாரையாக குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் மாநாட்டுத் திடல் நிரம்பி வழிகிறது. நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரிக்கும் என்பதால் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநாட்டில் விஜய் என்ன பேசப் போகிறார்?, அவரது கொள்கைகள், கோட்பாடுகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்க விஜய் கட்சியில் பிரபலங்கள் சிலர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் யார் என்ற எதிர்பார்ப்பும் எகிற வைத்துள்ளது.
Comments are closed.