பல கோடி ரூபாய் மதிப்புள்ள நில மோசடி வழக்கு: காத்திருந்தது போதும், கதவை உடைத்து தொழிலதிபர் வீட்டில் சோதனையிட்ட போலீசார்…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி, திருவெறும்பூர் கந்தநல்லூரில் புனித அடைக்கல மாதா கன்னியர் சபை செயல்பட்டு வருகிறது. இந்த சபைக்கு அதே பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 9 ஏக்கர் நிலம் உள்ளது. இந்தநிலையில் திருச்சி, அரியமங்கலம் லஷ்மி நகரைச் சேர்ந்த தொழிலதிபர் மோகன்பட்டேல், அவரது உறவினர்களான மகேந்திரன் மற்றும் சங்கீதா ஆகியோருடன் சேர்ந்து போலி பட்டா மூலம் அந்த நிலத்தை அபகரித்துக் கொண்டதாக கன்னியர் சபை சார்பில் கந்தநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மாரிமுத்து என்பவர் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் குற்றச்சாட்டுக்கு ஆளான மோகன்பட்டேல், மகேந்திரன், சங்கீதா ஆகிய மூவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு மோகன் பட்டேல் வீட்டில் போலீசார் சோதனை இட சென்ற போது பட்டேலின் குடும்பத்தினர் வாரண்ட் இருந்தால் மட்டுமே சோதனையிட அனுமதிக்க முடியும் எனக் கூறி போலீசார் சோதனை மேற்கொள்ள அனுமதிக்கவில்லை. இதனால், போலீசார் விடிய விடிய காத்திருந்தனர். இந்தநிலையில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று இன்று (17-10-2024) மதியம் சோதனையிட சென்றனர். ஆனால் வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் மோகன் பட்டேல் வீட்டின் பூட்டை உடைத்து டிஎஸ்பி பழனி தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

Comments are closed.