பிரபல தமிழ் பட இயக்குனர் மோகன் ஜி. இவர் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் மற்றும் பகாசுரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்த திரைப்படங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும், நாடகக் காதலையும் விமர்சித்து கதை சொல்லி இருந்தார். இவரது திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. இந்த நிலையில் இயக்குனர் மோகன் ஜி,பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுவதாக கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் சென்னை காசிமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து மோகன்ஜி- ஐ திருச்சியில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர் என்ன காரணத்துக்காக கைது செய்யப்பட்டார் என அவரது குடும்பத்தாரிடம் போலீசார் எதுவும் தெரிவிக்கவில்லை. அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் இல்லை. பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுவதாக அவர் கூறிய சர்ச்சை கருத்து காரணமாக அவர் கைது செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இருந்த போதும் கைதுக்கான முழுமையான காரணம் இன்னும் வெளியாகவில்லை. இயக்குனர் மோகன் ஜி யை சென்னையில் கைது செய்த போலீசார், அவரை திருச்சி அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர்.

Comments are closed.