Rock Fort Times
Online News

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு : மனு கொடுக்க வந்த வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி போலீசார் விசாரண

திருச்சி, சங்கிலியாண்ட புரம் – வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் ( வயது 64). மீன் வியாபாரி. இவரது மனைவி செல்வி ( வயது 58). இவர்களுக்கு  மதியழகன் உட்பட மூன்று மகன்கள் உள்ளனர் .இவர்களில் மதியழகன், கார் வாங்கி விற்கும் தொழில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு,  பாண்டியன் தனக்கு சொந்தமான இடத்தில் அரசு மானியத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார் .அவரை அணுகிய மூத்த மகன் மதியழகன், தன் வீட்டில் உள்ள குறை பணிகளை நிறைவு செய்ய 60 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கிறேன். என்னை தங்கிக் கொள்ள அனுமதியுங்கள் என்று கேட்டிருக்கிறார். அதையடுத்து  மதியழகன், அவரது மனைவி, குழந்தைகள் தங்க அனுமதித்த பாண்டியன், அவரது மனைவி செல்வி ஆகியோர் அருகில் உள்ள சிறிய இடத்தில் பிளக்ஸ் பேனர் கட்டி குடியிருந்து வந்தனர். ஒரு கட்டத்தில் உங்களிடம் வீட்டு பத்திரம் இருந்தால் வீணாகிவிடும். என்னிடம் கொடுங்கள் பத்திரமாக வைத்திருக்கிறேன் என்று கூறி,  மதியழகன் வீட்டு பத்திரத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு மதியழகன் மீண்டும் 60 ஆயிரம் ரூபாய் பணம் தருகிறேன் வீட்டை காலி செய்யுங்கள். எனது பத்திரத்தை திரும்பி தாருங்கள் என்று கேட்டதற்கு தர மறுத்துவிட்டார் .இது குறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் பலமுறை பாண்டியன் புகார்  கொடுத்தும் எவ்வித பலனும் இல்லை. மேலும் பாலக்கரை போலீசார் வயதான தம்பதி மீது வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மதியழகன் தனது வீட்டை சுற்றி ஐந்து சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் செல்வி குளிக்கவோ காலைக்கடன் கழிக்கவோ முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் .இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் கொடுத்தும் பலன் இல்லாததால், இன்று மக்கள் குறை கூட்டத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த பாண்டியனும் செல்வியும் தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதை முன்கூட்டியே அறிந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து பெட்ரோல் கேனை பிடிங்கி சென்று விட்டனர் .மேலும் அவர்களை நேராக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க வாய்ப்பு அளித்த போலீசார் ,உங்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். தனது சொந்த வீட்டை மூத்த மகன் அபகரித்து கொண்டதாக வயதான பெற்றோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுக்க பெட்ரோல் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்