நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது கார் பயங்கர மோதல்: நகைக்கடை அதிபர் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி…!
ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தில் நகைக்கடை வைத்திருப்பவர் ராஜேஷ் (33). இவரது சொந்த ஊர் கடலாடி ஆகும். இவர் தனது மனைவி பாண்டி செல்வி, குழந்தைகள் தர்ஷிலா ராணி (8), பிரணவிகா (4), மாமனார் செந்தில் மனோகரன் (70), மாமியார் அங்காளேஸ்வரி (58) ஆகியோருடன், தனது கைக்குழந்தைக்கு மருத்துவம் பார்ப்பதற்காக ராமநாதபுரம் சென்றுள்ளார். காரினை சபரி பிரிட்டோ என்பவர் ஓட்டியுள்ளார். ராமநாதபுரத்தில் குழந்தைக்கு மருத்துவம் பார்த்துவிட்டு நேற்று நள்ளிரவு 12 மணியளவில் தங்கச்சிமடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ராமநாதபுரத்தில் இருந்து வந்த அரசு பேருந்து ஒன்றில் பயணி ஒருவர் குடிபோதையில் வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உச்சிப்புளியை அடுத்துள்ள பிரப்பன்வலசை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தினை நிறுத்தியுள்ளனர். அப்போது ராஜேஷ் குடும்பத்தினர் வந்த கார், பேருந்தின் பின் பக்கம் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் ராஜேஷ், அவரது குழந்தைகள் தர்ஷிலா ராணி, பிரணவிகா, மாமனார் செந்தில் முருகன், மாமியார் அங்காளேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மனைவி பாண்டி செல்வி, கைக்குழந்தை மற்றும் கார் ஓட்டுநர் சபரி பிரிட்டோ ஆகியோர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேருந்து பயணிகளுடன் இணைந்து காயமடைந்த மூவரையும் மீட்டு ராமநாதபுரம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்த ராஜேஷ் உள்ளிட்ட 5 பேர் உடல்களையும் மீட்ட போலீஸார், உடற்கூறு ஆய்விற்காக ராமநாதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.