திருச்சியில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட்: எஸ்.பி. வருண்குமார் அதிரடி…!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை உதவி ஆய்வாளர் லியோனி ரஞ்சித்குமார் மற்றும் காவலர்கள் வீரபாண்டி, சாகுல் ஹமீது, மணிகண்டன் ஆகியோர் அண்மையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் புதுக்கோட்டையை சேர்ந்த சதாசிவம், ராமசாமி, நாகராஜ் ஆகியோர் துப்பாக்கியை வைத்துக்கொண்டு பறவைகளை வேட்டையாடி கொண்டிருந்தனர். அவர்களை பிடித்த லியோனி ரஞ்சித் குமார் தலைமையிலான போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். பறவைகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம். ஜெயில் தண்டனை உறுதி .உங்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளனர். அந்தத் தொகையை சதாசிவத்தின் உறவினர் விஜயகுமார் என்பவர் மூலம் வாங்கியுள்ளனர். இதுகுறித்து லஞ்சம் கொடுத்தவர்கள் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர்கள் லஞ்சம் வாங்கியது உறுதியாகியது. அதனையடுத்து உதவி ஆய்வாளர் லியோனி ரஞ்சித் குமார், காவலர்கள் சாகுல் ஹமீது, மணிகண்டன், வீரபாண்டி ஆகிய 4 பேரை பணியிடை நீக்கம்( சஸ்பெண்ட்) செய்து திருச்சி எஸ்.பி வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.
Comments are closed.