Rock Fort Times
Online News

துறையூரில் வீட்டுமனை வாங்க பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்- திருச்சி போலீசார் வேண்டுகோள்…!

திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்தவர் துரைராஜ். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர், துறையூர்- முசிறி சாலையில் வடக்குவெளி, கண்ணார் பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ள மனைப்பிரிவு விற்பனைக்காக பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மாத தவணையில் வீட்டுமனை வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்து இருந்தாராம்.  இதனை நம்பி பலரும் தவணைத் திட்டத்தில் சேர்ந்தனர்.  இந்தத் திட்டத்தில் சேர்ந்த துறையூர் சாவடி சந்து பகுதியைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் சுப்பிரமணி என்பவர் 2009 முதல் 2013ம் ஆண்டு வரை தவணைத் தொகையாக  ரூ. 1 லட்சத்து 32 ஆயிரத்து 500 கட்டியுள்ளார். தவணை காலம் முடிந்ததும் மனை கேட்டபோது, மனை தராமல், கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல்  துரைராஜ் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.  இதுகுறித்து சுப்பிரமணி அளித்த புகாரின்பேரில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில், துரைராஜின் தவணை மனை திட்டத்தில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால், அவர்கள் தங்களின் அசல் ஆவணங்களுடன் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி அலுவலகத்தில் நேரில் புகார் அளிக்கலாம் என திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்