Rock Fort Times
Online News

திருச்செந்துறையில் எவ்வித பிரச்சனையும் இன்றி பத்திரப்பதிவு- திருச்சி கலெக்டர் பிரதீப்குமார்…!

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஜீயபுரம் அருகேயுள்ள திருச்செந்துறையைச் சேர்ந்தவர், தனது 1.2 ஏக்கர் பூர்வீக நிலத்தை விற்க முயன்றபோது, சார் பதிவாளர் அலுவலகத்தில் வக்பு வாரியத்திடம் தடையில்லா சான்று பெற்று வரும்படி அறிவுறுத்தப்பட்டதால் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து விசாரித்தபோது, திருச்சியில் உள்ள  12 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு, தமிழ்நாடு வக்பு வாரிய தலைமைச் செயல் அலுவலர் ஏ.பி.ரபியுல்லா 11.08.2022-ல் அனுப்பிய கடிதத்தில் ‘செம்பங்குளம், பெரியநாயகி சத்திரம், மண்ணச்சநல்லூர், திருச்செந்துறை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள அனைத்து நிலங்களும் வக்பு வாரியத்துக்குச் சொந்தமானவை. வக்பு வாரியத்தின் தடையின்மைச் சான்று பெறாமல், அங்குள்ள நிலங்களை விற்பனை செய்யவோ, பரிமாற்றம் செய்யவோ, அடமானம் வைக்கவோ பத்திரப்பதிவுத் துறை அனுமதிக்கக் கூடாது’ என்று குறிப்பிட்டிருந்தது தெரியவந்தது. இதனால், குறிப்பிட்ட சர்வே எண்களுக்கு உட்பட்ட நிலங்களை விற்பனை செய்யவோ, அடமானம் வைக்கவோ, பரிமாற்றம் செய்யவோ முடியாத நிலைக்கு நில உரிமையாளர்கள் தள்ளப்பட்டனர்.  இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, திருச்செந்துறை மக்களுடன், பாஜக, இந்து அமைப்பினரும் போராடினர்.

இது தொடர்பாக ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில், வக்பு வாரியம் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காததால், திருச்செந்துறையில் நிலங்கள் வாங்க, விற்க எந்த தடையும் இல்லை என்று கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.  இந்நிலையில், வக்பு வாரிய சொத்துகள் தொடர்பான சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டது. அப்போது திருச்செந்துறை கிராமப் பிரச்சினையை சுட்டிக்காட்டிப் பேசிய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு, திருச்செந்துறையில் 1,500 ஆண்டுகள் பழமையான சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது.  அப்பகுதியினர் 1.2 ஏக்கர் நிலத்தை விற்க முயன்றபோது, அந்த நிலம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என பதிவாளர்அலுவலகத்தில் தெரிவித்தனர். அந்த நிலம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என அறிவிக்கப்பட்டுள்ளது உள்ளூர் மக்களுக்கே தெரியாது’ என்றார்.

இதுகுறித்து திருச்செந்துறையைச் சேர்ந்த ராஜா என்பவர் கூறும்போது, “எங்கள் கிராமம் முழுவதும் வக்பு வாரியத்துக்குச் சொந்தம் என்று கூறியதால் அதிர்ச்சி அடைந்தோம். இதுகுறித்த பேச்சுவார்த்தையில், அந்த இடம் வக்பு வாரியத்துக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்கள் டெல்லியில் உள்ளதாக வக்பு வாரியத்தினர் தெரிவித்தனர். அவற்றை எடுத்து வரும்வரை பத்திரப் பதிவு செய்ய தடையும் செய்யாதீர்கள் என கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.  தொடர்ந்து, இங்கு பத்திரப் பதிவுநடந்தாலும், குறைந்த விலையில்தான் நிலங்கள் விற்கப்படுகின்றன” என்றார்.

திருச்சி ஆட்சியர் மா.பிரதீப்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திருச்செந்துறையில் உள்ள 389 ஏக்கர் நிலங்கள் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று 2022-ல்முறையிட்டனர். ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், பத்திரப் பதிவுக்கு தடையில்லை என்று உத்தரவிடப்பட்டது. தற்போது அங்கு எவ்விதப் பிரச்சனையுமின்றி பத்திரப் பதிவுகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்