Rock Fort Times
Online News

திருச்சி காவிரி  கரைகளில் குவிந்த பெண்கள், புதுமண தம்பதிகள்- ஆடிப்பெருக்கு விழா உற்சாக கொண்டாட்டம்…! 

விவசாயம் செழிக்கவும், திருமணமான பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழவும், திருமணமாகாத  பெண்களுக்கு  நல்ல வரன் அமைய  வேண்டியும் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதம் ஆடி 18 தினத்தன்று  காவிரி தாய்க்கு   படையலிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபடுவது வழக்கம்.  மேலும், புதுமண தம்பதிகள் தங்களது திருமண நாளின் போது அணிந்திருந்த மாலைகளை பத்திரப்படுத்தி  வைத்திருந்து ஆற்றில் விடுவார்கள்.   அந்தவகையில் இன்று (03-08-2024)    ஆடி 18  உற்சாகமாக கொண்டாடப்பட்டது.   எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. இதனால், உற்சாகமடைந்த பொதுமக்கள் மற்றும் புதுமணத்  தம்பதிகள் அதிகாலை 5 மணி முதலே திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள  அம்மா மண்டபம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, சிந்தாமணி ,  ஓடத்துறை உள்ளிட்ட  பகுதிகளில் குவிந்தனர்.

வழக்கமாக ஆடிப்பெருக்கு நாளில் காவிரி படித்துறையில் காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை நடத்தப்படுவது வழக்கம்.  ஆனால், இந்த ஆண்டுபடித்துறையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் அம்மா மண்டபத்தில் உள்ள சிமெண்ட் தளத்தில் வாழை இலை விரித்து அதில்  மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, அதற்கு அருகம்புல் படைத்து முதலில் விநாயகரை வழிபட்டனர். பிறகு மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம் ஆகியவை வைத்து விளக்கேற்றி, குல தெய்வத்தையும், காவிரி தாயை மனதில் நினைத்து வழிபட்டனர்.   மேலும், பல வகையான சாதங்கள் படைத்து காவிரி தாய்க்கு சூடம் காட்டி வழிபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு உள்ள வேப்பமரத்திற்கு  மஞ்சள் கயிறு கட்டினர்.  அதனைத் தொடர்ந்து பல பெண்களுக்கு மூத்த சுமங்கலிகள் மஞ்சள் கயிறு கட்டி விட்டனர்.   புதிதாக திருமணமான தம்பதிகள் ஆற்றில்  நீராடி, கிழக்கு முகமாக நின்று, தங்களின் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு, தங்களின் இல்லற வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் குறைவில்லாமல் பெருக வேண்டும் என வேண்டிக்  கொண்டனர்.   திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுக்கு விரைவில் நல்ல கணவர் அமைய வேண்டும் என காவிரி தாயை வழிபட்டு, மஞ்சள் கயிறு  அணிந்து  கொண்டனர். பின்னர்,  காவிரி தாய்க்கு படைத்து வழிபட்ட தேங்காய், பழம், பச்சரிசி  ஆகியவற்றை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து உற்சாகமாகக் கொண்டாடினர்.

இதேபோல, காவிரி கரையோர பகுதிகளான கீதாபுரம், ஓடத்துறை, திருவளர்ச்சோலை,  கம்பரசம்பேட்டை, பெட்டவாய்த்தலை, பனங்காவேரி, திருப்பராய்த்துறை, தொட்டியம், ஸ்ரீராமசமுத்திரம்,  முசிறி, முக்கொம்பு, கொள்ளிடம் என திருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடப் பகுதியில்  அனு மதிக்கப்பட்ட பகுதியில் மக்கள் ஆடிப்பெருக்கை கொண்டாடி மகிழ்ந்தனர்.   ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின்பேரில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்