Rock Fort Times
Online News

திருச்சியில் பரபரப்பு: அண்ணனை கொலை செய்து ஆட்டோவில் ஏற்றி சென்று ஆற்றில் வீச முயன்ற தம்பி கைது- உடந்தையாக இருந்த தாயும் சிக்கினார்…!

திருச்சி பீமநகரை சேர்ந்தவர் பர்வீன் பானு.  இவருக்கு தமிமுன் அன்சாரி (வயது33)  சையது அபுதாஹிர் ( 29)   ஆகிய 2 மகன்கள்.  இதில், மூத்த மகன் தமிமுன் அன்சாரி ஆட்டோ டிரைவராகவும்,  டீ மாஸ்டராகவும் பணிபுரிந்து வந்தார்.  இவருக்கு கடந்த 2017 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.  5 வயதில் ஆண் குழந்தை உள்ளது.  குடி பழக்கத்துக்கு அடிமையான  தமிமுன் அன்சாரியின் நடவடிக்கை பிடிக்காததால் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.  அதன் பின்னர் மேலும் குடிப்பழக்கம் அதிகரித்தது. தினமும் மது அருந்தி விட்டு வந்து தாயிடம் தகராறு செய்ததோடு  அவ்வப்போது  குடிப்பதற்கு பணமும் கேட்டு தகராறு செய்து வந்தார்.  வழக்கம்போல நேற்று இரவும்(21-07-2024)  தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்ததோடு அவரை தமிமுன் அன்சாரி அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த தம்பி சையது அபுதாஹிர் வீட்டில் இருந்த அரிவாளால் தமிமுன் அன்சாரியின் தலையில் வெட்டினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்தார். இருப்பினும் ஆத்திரம் அடங்காமல் அவரது கழுத்தில் மின்வயரை சுற்றி இறுக்கினார். இதில் மூச்சு திணறி தமிமுன் அன்சாரி உயிரிழந்தார். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அக்கம் பக்கத்தில் யாருக்கும் தெரியவில்லை.  அதைத்தொடர்ந்து தமிமுன் அன்சாரி உடலை யாருக்கும் தெரியாமல் ஆற்றில் வீசி விட  பர்வீன்பானு, சையது அபுதாஹிர் முடிவு செய்தனர்.  அதன்படி இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் அன்சாரியின் உடலை இருவரும் ஆட்டோவில் ஏற்றி கொள்ளிடம் ஆற்றில் வீசுவதற்காக சென்றனர்.

அதன்படி, அங்கு சென்று அவர்கள் ஆற்றுப் பாலத்தில் உடலை இறக்கும் போது, இருசக்கர வாகனங்கள் அந்த வழியாக சென்றதால் பயந்து போன அவர்கள் உடலை அங்கேயே போட்டுவிட்டு ஆட்டோவில் வீட்டுக்கு வந்து விட்டனர்.  பாலத்தில் வாலிபரின் உடல் கிடப்பதை அறிந்து ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக  ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி சையது அபுதாஹிரை கைது செய்தனர். கொலையை மறைக்க முயன்றதாக பர்வீன் பானுவும் கைது செய்யப்பட்டார்.  இந்த கொலை சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்