Rock Fort Times
Online News

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பெண் வழக்கறிஞர் அ.தி.மு.க.விலிருந்து நீக்கம்- இபிஎஸ் அதிரடி…!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வழக்கறிஞரும், திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அதிமுக இணைச் செயலாளர் மலர்கொடி, செம்பியத்தை சேர்ந்த ஹரிகரன், திருநின்றவூரைச் சேர்ந்த சதீஷ் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், மலர்கொடியின் கணவர் பிரபல தாதாவாக வலம் வந்தவர் எனக் கூறப்படுகிறது. இதேபோல் சதீஷ் திமுக நிர்வாகி ஒருவரின் மகன் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில், கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞரான மலர்கொடி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த, மலர்கொடி சேகர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார். கட்சி நிர்வாகிகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்