Rock Fort Times
Online News

கரூர் மாநகராட்சிக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம்.

உரிய அனுமதிகளைப் பெறாமல் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட கரூர் மாநகராட்சிக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கரூர் மாநகராட்சி சார்பில், திருமாநிலையூர் கிராமத்தில் நீர் வழிப்பாதையில் பேருந்து நிலையம் கட்டப்படுவதை எதிர்த்து அப்பகுதியைச் சேர்ந்த தங்கவேல்ராஜ் என்பவர் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், விவசாய நிலங்களுக்கு செல்லும் பாசனக் கால்வாய்கள் மீது பேருந்து நிலையம் கட்டப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அமராவதி நதியில் இருந்து 446 மீட்டர் தூரத்தில் தான் பேருந்து நிலையம் கட்டப்படுவதாகவும், பாசனக் கால்வாய்கள் மீது பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டது. ஆனால், தீர்ப்பாயம் அமைத்த கூட்டுக்குழு நேரில் ஆய்வு செய்து அளித்த அறிக்கையில், பேருந்து நிலைய கட்டுமான பகுதியின் வழியாக கால்வாய்கள் செல்வதாகவும், சட்டப்படி அரசிடம் உரிய அனுமதியைப் பெறாமல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உரிய அனுமதிகளைப் பெறும் வரை பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட தீர்ப்பாயம், இந்த கட்டுமான பணிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டது. மேலும், பணிகளை மேற்கொள்வதற்கு உரிய ஒப்புதல்களை பெறுவது அவசியம் எனத் தெரிந்தும், கட்டுமான பணிகளை மேற்கொண்ட கரூர் மாநகராட்சிக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த தீர்ப்பாயம், இத்தொகையை மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு செலுத்தவும் உத்தரவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்