Rock Fort Times
Online News

வின் அதிர்ந்த சிவகோஷத்துடன் விமரிசையாக நடைபெற்ற திருச்சி,மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் சித்திரை தேரோட்டம்

 

உலகப்புகழ்பெற்ற திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

தேரோட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

 

மலைக்கோட்டை

தாயுமான சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 

அன்று முதல் ஒவ்வொரு நாளும் சுவாமி – அம்பாளுக்கு பகலில் சிறப்பு அபிஷேகமும், இரவில் சிறப்பு அலங்காரத்துடன் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலாவும் நடைபெற்று வருகிறது.

 

9-ஆம் நாளான இன்று (ஏப்ரல்- 22 )அதிகாலை 4.30 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில் சுவாமி-அம்பாள் கோயிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகி மலைக்கோட்டை உள்வீதி வழியாக 5.40 மணிக்கு தாயுமான சுவாமி உடனுறை மட்டுவார் குழலம்மை பெரிய தேரிலும், தாயார் சிறிய தேரிலும் எழுந்தருளினர்.

 

பின்னர் 6.10 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தேரோட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு சிறிய சப்பரத்திலும், யானை லட்சுமியும் முன்னே செல்ல, பெரிய தேரையும், சிறிய தேரையும் பக்தர்கள் சிவ சிவா என்ற முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

 

இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் வெகு விமரிசையாக தேரோட்டம் நடைபெற்றது. தேர் செல்லும் பாதைகளில் ஆங்காங்கே பக்தர்களுக்கு பாலும், குளிர்பானங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

திருத்தேர் ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பிரகாஷ் , உதவி ஆணையர் செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பு அனிதா இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் செய்திருந்தனர்

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்